புங்குடுதீவு வித்தியாவுக்கு நீதி வேண்டும், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோசத்துடன் முஸ்லிம் மாணவ மாணவிகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைககழக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
1988ம் ஆண்டுக்குப் பின்னர் 27 வருடங்களின் பின்பு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவ, மாணவிகளால் வடக்கு தமிழ்
மாணவிக்காக இந்தப் போராட்டம் நடந்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விடயம். இப்படியான ஒன்று நடக்காதா என்று ஆதங்கப்பட்ட காலம் இருந்தது. கடந்த 2013ம் ஆண்டு வருடம் ஜூன் மாதம் என்னால் வரையப்பட்ட கட்டுரை இது காலத்தின் தேவை கருதி மீண்டும் பதிவு செய்கின்றேன்
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடம் தமிழ் உணர்வில்லையா?
வடக்கில் பல்கலைக்கழக மாணவர்களின் கைதைக் கண்டித்தும், பல்கலை வளாகத்தினுள் அத்துமீறிய பொலிசாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும் வடக்கில் பல அமைப்புக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளது. மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் அமைதியாக காட்டியுள்ளார்கள்.
இவைகளைத் தாண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்ப்பு, கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளார்கள். பெரும்பான்மைச் சிங்கள மாணவர்களுக்குள்ள உணர்வுகள் கூட சகோதர மொழி பேசும் முஸ்லிம்களுக்கு இல்லாமல் போய்விட்டதே.
இப்படியே முஸ்லிம்கள் போனால் முஸ்லிம்களின் நிலைதான் என்ன? இந்த நாட்டில் யாரை நம்பி முஸ்லிம்கள் உள்ளார்கள். முற்று முழுதாக சிங்களப் பெரும்பான்மை அரசியலை மட்டும் நம்பியா முஸ்லிம்களின் எதிர்காலம் உள்ளது.
பேராதனை வளாகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்களும் கற்று வந்தாலும் பேராதனை வளாகம் பொரும்பான்மையாக சிங்கள மாணவர்களை அதிகமாக உள்வாங்கப்பட்ட வளாகம். பேராதனையில் மதம் இனம் மொழிகளுக்கு அப்பால் சக மாணவர்கள் என்ற கோதாவில்தான் யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஆதரவாக குறித்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
அப்படியானால் யாழ்ப்பாணத்து வளாக மாணவர்கள் ஒலுவில் வளாகத்தின் சக மாணவர்கள் இல்லையா? மாணவர்களிடத்திலும் முஸ்லிம் அரசியல் வாதிகள் போன்று இனப்பாகுபாடு களையப்பட வேண்டும்.
ஆனால் ஒரே மொழி பேசும், தமிழ் மாநிலத்தில் இருக்கின்ற அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைககழக மாணவர்கள் மட்டும் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் இதுவரையும் காட்டவில்லையே என்கின்ற போது ஒலுவில் மாணவர்களுக்கு சகோதர உணர்வே இல்லையா? இன்று தமிழ் மாணவர்களுக்கென்றால் நாளை முஸ்லிம் மாணவர்களுக்கும் இந்த நிலை இல்லாமலா போகும்.
நீதி நியாயம் செத்துப்; போய்விட்டதா? இல்லை உணர்வுகள் மரித்துப் போய் விட்டதா? வாள் ஏந்திய பரம்பரை இஸ்லாமிய சமுதாயம். அப்படிப்பட்ட பரம்பரையில் உதித்தவர்கள் இன்று சகோதர இனத்தின் இல்லை மனித குலத்தின் மீது காட்டுமிராண்டித் தனமான காட்டுத் தர்பார்களை உயர்கல்வி நிறுவனங்கள் கண்டிக்கவில்லையென்றால் வேறு யார்தான் கண்டிக்க முடியும்.
மிகவும் குறைந்த ஒத்துழைப்பான இதைக் கூட நாம் செய்ய முன்வரவில்லயென்றால் எதிர்கால தமிழ், முஸ்லிம் இன உறவு எங்கிருந்து வரும். ஒலுவில் வளாகம் பெரும்பான்மையாக முஸ்லிம் மாணவர்கள் கொண்ட வளாகம் என்பதால் அந்த வளாகம் முஸ்லிம் இனத்திற்கு மட்டும் சொந்தமானது என்று முத்திரை குத்த முடியுமா? எல்லா வகையிலும் ஒலுவில் வளாகத்தினர் தனித்து நிற்பது வளாகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தடையாகவே அமைந்து விடும்.
ஒலுவில் வளாகத்தின் உபவேந்தர் பதவிக்காக ஜனாதிபதியிடம் பரிந்துரை பண்ணுவதற்காக தமிழ் அமைச்சரின் தயவை நாடலாம், ஆனால் தமிழ் மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஒரு குரல் கொடுக்க முடியாமல் போய்விட்டது.
முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போன்று, முஸ்லிம் கல்வித்துறையினரும், கல்வியாளர்களும், முஸ்லிம் மாணவர்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தில் ஒரு சிறிய வகிபாகமாவது செய்யவில்லையென்றால் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கே விபரீதமானது.
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அப்பால் தமிழ் மக்களுடன் ஒரு நெருக்கத்தை முஸ்லிம் சமுதாயம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணமிருந்தால் அது தென்கிழக்கு பல்கலைககழகத்தில் இருந்துதான் உருவாக வேண்டும். இது அரசியலுக்கு அப்பால் இன உறவுக்காக, இன உறவுப் பாலமாக ஒரு முன்மாதிரியாக ஒலுவில் வளாகம் செய்ய வேண்டும்.
கல்முனையில் இருந்து தமிழ், முஸ்லிம் உறவுக்கான ஒரு புதிய அரசியல் அணி உருவாக வேண்டும் என்று சொல்கின்றோமோ அதே போன்றுதான் தமிழ், முஸ்லிம் இன உறவுக்காக அரசியல் சக்திகளுக்கு அப்பால் தென்கிழக்கு பல்கலைக்ேகழக வளாகம் முன்னெடுப்புச் செய்ய வேண்டும்.
பொத்துவில் முஸ்லிம் மக்களின் 502 ஏக்கர் விவசாய நிலங்களை அடாத்தாக பறித்து சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளோ அல்லது ஒரு முஸ்லிம் அமைப்போ வாய் திறக்கவில்லை. ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் ஒரு இன உறவு இருக்குமானால் வட மாகாணமே பொங்கியெழும் நிலமையை உருவாக்கலாம். இந்தக் கோணத்தில் முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டாமா.
முஸ்லிம் அரசியல்வாதிகளால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு விடிவு காலமும் கிடைக்கப் போவதில்லை. எந்தவொரு விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக தமிழ் மக்களையும் தயார்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உருவாகியுள்ளது.
முஸ்லிம்களுக்காக வடக்கில் இருந்து எழுகின்ற குரல்கள் சர்வதேசம் மட்டுமல்ல ஐ.நா.மன்றம் வரையும் ஒலிக்கும். முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினைகளும் பக்கத்து நாடு இந்தியாவுக்குக் கூட தெரியாது என்கின்ற போது சர்வதேசத்திற்கு எங்கே தெரியப் போகின்றது.
அரசியல்வாதிகள்தான் இன உறவுகளை மதிப்பதில்லை. மக்களாகிய நாம் இணையலாம் அல்லது தென்கிழக்கு வளாகம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் மற்றும் நலன்புரி அமைப்புக்களுடன் ஒரு புரிந்துணர்வு நிலையை ஏற்படுத்துவார்களேயானால் எதிர்கால முஸ்லிம்களுக்கு பிரகாசமான நல்ல வாய்ப்புக்களை உருவாக்கும் என்பதில் மாற்றமில்லை.
ஒரே மொழியுடன் பிறந்து வளர்ந்து தமிழ் மாநிலத்தில் வாழ்கின்ற நமக்குள் ஏன் இந்த பேதப் பிதற்றல், எதற்காக இந்த வேற்றுமை. இதயத்தையும் மனசையும் கல்லாக்கிக் கொண்டு அநீதிகளை மறைத்து நாம் மௌனிப்பதனால் நாளை நமக்கும் இந்த நிலை வரமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.
கொழும்பு காலி பகுதிகளில் முஸ்லிம் வர்த்தகர்களையும், வர்த்தக நிலையங்களையும் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் விசம் கக்கி வருகின்றது. முஸ்லிம்களின் கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தலங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தட்டிக் கேட்க நாதியற்ற முஸ்லிம் ஆட்சிப் பங்காளிகள் அப்படியானால் முஸ்லிம்களின் நிலைதான் என்ன?
இப்போது வடகிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு அடைக்கலமும், அரவணைப்பும் தேவைப்படுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புடன் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு ஒரு இணக்கப் பாட்டுக்கு முன்வர வேண்டும். அரசியலுக்கு அப்பால் வடபகுதி மக்களின் அரவணைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு மிக அவசியமான தேவையாகும்.
கிழக்கில் பெருகிவரும் சிங்களக் குடியேற்றங்களை தமிழ், முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சேபிக்க வேண்டும். கல்முனை முஸ்லிம்களுக்கும் வடபகுதி மக்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த கோணத்தில் கல்முனை வர்த்தக சம்மேளனம் சிந்திக்க வேண்டும். உரிமைகளுக்காக ஒரு கூட்டம் முஸ்லிம்களிடத்தில் இருந்து கிளம்ப வேண்டும். சலுகைகளுக்காகவும், முள்ளுத்துண்டுகளுக்காகவும் ஏற்கனவே பல கூட்டங்கள் முஸ்லிம்களிடத்தில் இருந்து கிளம்பிவிட்டது.
இந்த சலுகைக் கூட்டங்கள் வடகிழக்கு முஸ்லிம்களை எப்போதோ மொத்த விலைக்கு விற்றுவிட்டது. எஞ்சியுள்ள உரிமைகளையாவது காப்பாற்ற வேண்டாமா? தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மட்டும்தான் முஸ்லிம்களின் உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் என்பதை முஸ்லிம்கள் உணராதவரை முஸ்லிம்கள் எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளைகள்தான். முஸ்லிம்களின் தளம் என்கின்ற போது அது கல்முனைதான் தமிழ் மக்களின் தளமாக திருகோணமலை பார்க்கப்படுவது போன்று கல்முனையில் இருந்துதான் அரசியல் மாற்றம், இன உறவுப்பாலம் உருவாக வேண்டும்.
வடக்கு மக்களுக்கு எவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் எல்லா வகையான முன்னெடுப்புக்களுக்கும் வலுச் சேர்க்கின்றதோ அதே போன்று முஸ்லிம் மக்களின் எல்லா விதமான முன்னெடுப்புக்களுக்கும் வலுச் சேர்க்கும் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். தமிழ் மக்களின் நீதி நியாயமான போராட்டங்களை மனித நேயத்துடன் தென்கிழக்கு பல்கலைக் கழகமும், முஸ்லிம் மக்களும் நோக்க வேண்டும்.
நாம் யாருக்கும் வக்காளத்து வாங்குவது நோக்கமல்ல, மனிதாபிமானம், மனித நாகரீகம், மனித நேயம் செத்துவிடக் கூடாது. மனித நேயம் உயிர்வாழ வேண்டும். மனித நேயத்தை அங்கீகரிக்காத கூட்டங்களாக முஸ்லிம்கள் மாறக்கூடாது. மனித நேயம் காப்பாற்றப்பட வேண்டும். மனித நேயத்தை கிழக்கு வாழ் முஸ்லிம்கள் நோக்கவில்லை என்றால் வடகிழக்கில் முஸ்லிம்கள் தனிமைப்பட்டு விடுவார்கள்.
நாம் சிங்களவாதம் சார்ந்த மக்களாகவே தொடர்ந்து இருப்போமானால் வடகிழக்கில் தமிழ் மக்களால் கைவிடப்பட்ட மக்களாக தனிமைப்படுத்தப்பட்ட மக்களாக முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப் பட்டு விடுவார்கள். இந்நிலை மாற வேண்டும். தமிழ் மக்களின் நீதி, நியாயமான போராட்டங்களை மனித நேயத்துடன் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டு இன உறவை முன்னெடுக்க வேண்டும்.
இன உறவுக்கு முஸ்லிம் மாணவர்களாவது முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
மாணவர் சமுதாயம் என்பது அரசியல் கலப்பில்லாத சமூகமாகும். அந்த வகையில் தான் யாழ்ப்பாண மாணவர்களின் நியாயமான போராட்டத்தை பேராதனை சிங்கள மாணவர்கள் அங்கீகரித்து, நியாயப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். புலிகளை ஒழித்துவிட்டதாக அரசாங்கமே சொல்கின்ற போது நமக்கு ஏன் தயக்கம் புலிகள் இல்லையென்கின்ற போது புலி முத்திரை எப்படிக் குத்த முடியும்.
அரசின் இரும்புக் கரம் என்கின்ற போது அது இனமென்ன, மொழியென்ன, மதமென்ன எல்லாம் ஒன்றுதான். அந்த இரும்புக் கரம் எல்லா மாணவர்களிடமும் தனது அடக்கு முறையைக் காண்பிக்கும் மாணவர்கள் சமுதாயம் என்கின்ற வகையில் ஒலுவில் வளாக மாணவர்களிடத்தில் இன, மொழி ஒற்றுமை இருக்க வேண்டும். தமிழ் மக்களின் தமிழ் மாணவர்களின் நீதி, நியாயமான போராட்டங்களைத் தட்டி களிக்க முடியாது அது தர்மமும் அல்ல.
விழுந்தது நாம் என்றாலும் வீழ்வது தமிழாக இருக்கக் கூடாது. கருணை, காருண்யம் முஸ்லிம்களிடம் அருகி வருகின்றது. இந்த நிலை எதிர்கால தமிழ் பேசும் மாணவர்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும். இன ஒற்றுமை மாணவர்களிடத்தில் இருந்தாவது உருவாக வேண்டும்.
எதிர்கால அரசியல் சிந்தனை திட்டமில்லாமல் எதுவுமே இல்லாமல் கிழக்கு முஸ்லிம்கள் வழி நடாத்தப்படுகின்றார்கள். தேர்தல் காலங்களில் மட்டும் வீராவேசம், பத்திரிகையில் மட்டும் வீராவேசம் மற்ற இடங்களில் பெட்டிப்பாம்பு. எதிர்கால மாணவர் சமுதாயமாவது இன ஒற்றுமையுடன் வளர்க்கப்பட வேண்டும்.
மாணவர் பரிமாற்றுத் திட்டம்
எதிர்காலத்தில் மாணவர் பரிமாற்றுத் திட்டமொன்றை யாழ்ப்பாண வளாகம் கிழக்கு வளாகம், தென்கிழக்கு வளாகம் ஆகியன இணைந்து நடாத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு துறையிலுமிருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு தென்கிழக்கு வளாக மாணவர்கள் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைககழகத்தில் குறைந்தது ஒரு மாதமாவது தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும். அதேபோன்று யாழ்ப்பாணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒலுவில் வளாகத்தில் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும்.
கலைப்பீடம், முகாமைத்துவம், விஞ்ஞானம் பீடங்களில் இருந்து மூன்று பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் 6 மாதங்களுக்கொருமுறை இப்படியாக மாணவர் பரிமாற்றறுத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். வடக்கிலுள்ள தற்போதைய 37-40 வயதுடைய தமிழர்களுக்கு முஸ்லிம்கள் பற்றி என்னவென்றே தெரியாமல் உள்ளது.
அதே போன்று கிழக்கிலுள்ள 37-40 வயதுடைய முஸ்லிம்களுக்கு தமிழர்கள் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ், முஸ்லிம் மாணவர்களிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அதற்கான ஏற்பாடாக இந்த மாணவர் பரிமாற்றுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். முஸ்லிம் மாணவர்கள் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளமாகவுள்ளது. முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாகவுள்ளது.
இந்த மாணவர் பரிமாற்றுத் திட்டத்தின் மூலமாக வரலாற்று முக்கியத்துவமிக்க, பழமை வாய்ந்த யாழ்ப்பாணத்து பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் அங்கு தங்கி ஒரு மாதம் கல்வி கற்பது என்பது ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கலாம். மாணவர் பரிமாற்றுத் திட்டம் என்பது நடைமுறைக்கு வருகின்ற போது அதுவும் முஸ்லிம் மாணவர்களுக்குத்தான் நன்மைகளும், பயன்களும் அதிகமாகும்.
ஏனெனில் வடக்கு மாணவர்களின் தொடர்புகள் அதிகரிக்கும் அதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் சர்வதேச நெருக்கம் அதிகரிக்கும், இன உறவு அதிகரிக்கும், நல்ல புரிந்துணர்வு அதிகரிக்கும், முஸ்லிம்களுக்கு ஏதாவது அரசின் அநீதிகள் நடைபெறும் போது வடக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் முஸ்லிம்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தை நடாத்துவார்கள்.
எதிர்கால இன உறவுக்காகவும், ஒரு புரிந்துணர்வுக்காகவும் இந்த மாணவர் பரிமாற்றுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக யாழ்ப்பாண வளாகம், கிழக்கு வளாகம், தென்கிழக்கு வளாகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் உபவேந்தர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க முன் வர வேண்டும்.
அரசியல்ரீதியாக ஜனாதிபதியுடன் நல்ல நெருக்கமான தொடர்பு கொண்ட அரசியல்வாதிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஊடாக உரிய நடவடிக்கைகள் மற்றும் நிதி உதவிகளுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.
அரசியல் இலாபங்களுக்கு அப்பால் இன உறவை பெரிதும் விரும்புகின்றவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது சமூக நலன் சம்மந்தமானது. இந்தத் திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்தக் கூடியவாறு திட்டங்களும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக குறித்த அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் பேசி அனுமதியைப் பெற வேண்டும். குறித்த திட்டமானது முஸ்லிம் மாணவர்களுக்கு நன்மை என்பதை விட முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பெறக் கூடியது என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இவ்வாறு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்…
இன்று அந்த மாற்றம் வந்துள்ளது.நாம் அந்த இலக்கை அடைந்துள்ளோம். அரசியலக்கு அப்பால் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நாம் எதிர்பார்த்த இந்த இலக்கை அடைந்துள்ளார்கள். இனிவரும் காலங்களில் இந்த ஒற்றுமை ஓங்கி ஒலிக்கட்டும்..
post signature

Post a Comment

 
Top